நான் என் மனைவியை அழைத்துக்கொண்டு ஒரு பெரிய உணவகத்திற்கு சென்றேன், அது ஒரு ஐந்து நட்சத்திர வசதி கொண்ட ஆடம்பர உணவகம். பசிக்காக சாப்பிட முடியாது, ருசிக்காக மட்டுமே சாப்பிட முடியும், ஏனென்றால் அவ்வளவு விலை. நான் ஒருபக்கம் என் செலவு கணக்கை கணக்கிட்டு கொண்டே உள்ளே நுழைந்தேன். என் மனைவி என்னை கவனித்தவாறே உள்ளே வந்தாள்.
நாங்கள் இருவரும் மேஜையில் அமர்ந்தோம், அங்கே சர்வர் கூட கோட்டு சூட்டு போட்டிருந்தார். அவர்கள் எங்கள் முன் ஒரு பெரிய பைலை நீட்டினார்கள், அது மெனு கார்ட்.. அதை புரட்டி பார்த்ததும் என்னையே புரட்டி போட்டது. ஐநூறு ரூபாய்க்கு கீழே கிடைக்கக்கூடிய ஒரே பொருள் தண்ணி பாட்டில் மட்டுமே. அதை பார்த்ததும் அதை என் மனைவிடமே கொடுத்துவிட்டேன். அவளே ஏதாவது ஆர்டர் செய்யட்டும் என்று அவளை பார்த்துக்கொண்டிருந்தேன்.
அவள் அதை வாங்கியதும், “இன்னிக்கி என்னோட ட்ரீட்” என்றாலே பார்க்கலாம், என்னுள் ஆயிரம் விளக்குகள் போட்டது போன்று ஒரு உணர்ச்சி. நான் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டேன். அன்று நாங்கள் சாப்பிட்ட ஒவ்வொரு உணவும் எனக்கு அமிர்தமாய் இருந்தது. கடைசியாக என் மனைவி அவளுடைய கிரெடிட் கார்டை எடுத்து பில்லை கட்டினாள்.
ஆனால், “ட்விஸ்ட்” என்னவென்றால் என் மனைவியின் கிரெடிட் கார்டு பில்லை ஒவ்வொரு மாதமும் நான் தான் கட்டுகிறேன். இது எனக்கு நான் சாப்பிடும்போதே தெரியும் ஆனால் “அன்று நான் என் கையில் இருந்து பில்லை கட்டவில்லை” என்ற எண்ணம் மேலோங்கி நின்றதே தவிர, இந்த பணம் எங்கிருந்து வருகிறது என்ற எண்ணம் வரவே இல்லை.
பணத்தின் மதிப்பு அதன் வாங்கும் திறனை தாண்டி, அது எங்கிருந்து வருகிறது “Source of fund” என்ற தகவல் தான் நம்மை அதிகம் செலவழிக்க தூண்டுகிறது.
இந்த தவறை நாம் எல்லோரும் நம் வாழ்க்கையில் செய்கிறோம். இந்த மனக்கணக்கு வியாதிக்கு (ஆமாம், வியாதி) மருத்துவர்கள் வைத்த பெயர், “மெண்டல் அக்கவுன்டிங் பயாஸ்” – . இந்த தவறு, நம் சுய நினைவை தாண்டி நம்மை அதிகம் செலவழிக்க வைக்கும். பல சமயம் நம்மை தவறான முதலீட்டு முடிவுகளை எடுக்க வைக்கும்.
நான் என் பர்சில் இருக்கும் டெபிட் கார்டை எடுத்து ஐநூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட தயங்குவேன். அதுவே என் கிரெடிட் கார்டு மூலம் இரண்டாயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் போடுவேன்.
இங்கே இரண்டுமே என் பணம்தான். ஏதோ கிரெடிட் கார்டில் பெட்ரோல் போட்டால், பேங்க் நம் கஷ்டத்தை புரிந்து கொண்டு இனாமாக பெட்ரோல் போடுவது போல் ஒரு எண்ணம் நம் மனதில் கன நேரத்தில் வந்து நம் பர்சில் கிரெடிட் கார்டை துளாவும்.
அதே நேரத்தில் என்னை ஐநூறு ருபாய் செலவழிக்க வேண்டிய இடத்தில் இரண்டாயிரம் ருபாய் செலவழிக்க வைத்துவிட்டது இந்த “மெண்டல் அக்கவுன்டிங் பையாஸ்”.