நம்மில் பலர் பணச் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். காரணம், எதிர்கால நிகழ்வுகளை சமாளிக்க முன் ஏற்பாடு எதுவும் செய்யாதது மற்றும் எதிர்காலத்துக்காக பணம் எதையும் சேமித்து வைக்காமல் இருப்பதாகும். ஐந்தறிவு படைத்த எலி, எறும்பு போன்ற ஜீவராசிகள் கூட மழைக் காலத்துக்கு என முன்கூட்டியே உணவை சேர்த்து வைக்கின்றன. இந்த உணவு பொருள்கள் மிகவும் தரமானதாக இருப்பதை நடைமுறையில் காண முடியும்.
உதாரணத்துக்கு, நிலக்கடலை வயலில் வசிக்கும் எலிகள், நன்றாக விளைந்த தரமான நிலக்கடலைகளை அதன் தோலுடன் எலி வளைகளில் சேர்த்து வைக்கின்றன. விவரமான விவசாயிகள் வயல்களில் எலி வளை இருந்தால், அதை தோண்டி உள்ளே இருக்கும் தரமான நிலக்கடலைகளை எடுத்து அடுத்த பருவத்துக்கு விதை கடலையாகப் பயன்படுத்துகிறார்கள்.
நிச்சயமற்ற தன்மை..!
இன்னொரு உதாரணத்தை பார்த்தால் ஏன் சேமிக்க வேண்டும்?, முதலீடு செய்ய வேண்டும் என்பதன் அவசியம் ஒருவருக்கு முழுமையாக விளங்கும்.
குடை என்பது மழையை நிறுத்த உதவாது. ஆனால், மழையில் நனையாமல் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு பாதுகாப்பாக செல்ல உதவும்.
அதேபோல், காப்பீடும் முதலீடும் என்பது நிச்சயமற்ற தன்மையை தடுத்து நிறுத்தாது. ஆனால், அந்த நிலையை சமாளிக்க வலிமையான நிதி நிலையை கொடுக்கும்.
காக்கும் காப்பீடுகள்..!
ஆயுள் காப்பீடு பாலிசிகள், குடும்பத்தின் வருமானம் ஈட்டும் நபருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் குடும்ப உறுப்பினர்களுக்கு நிதி ரீதியான பாதுகாப்பை அளிக்கின்றன. குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர்கள், அவர்களின் ஆண்டு வருமானத்தை போல் சுமார் 15 மடங்கு தொகைக்கு டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது அவசியம்.
உதாரணத்துக்கு, ஒருவரின் மாதச் சம்பளம் ரூ.35,000 என வைத்துக் கொண்டால், அவரின் ஆண்டு சம்பளம் ரூ. 4.2 லட்சம் ஆகும். இதன் 15 மடங்கு ரூ. 63 லட்சத்துக்கு பாலிசி எடுக்க வேண்டும். 30 வயதுள்ள ஒருவர் ரூ.1 கோடிக்கு பாலிசி எடுக்க ஆண்டு பிரீமியம் சுமார் ரூ.12,000- ரூ.14,000தான்.. இந்த பாலிசியில் முதிர்வின் போது பாலிசிதாரர் உயிருடன் இருந்தால் முதிர்வு தொகை எதுவும் கிடைக்காது என்பதால் பலரும் இந்த பாலிசியை எடுக்காமல் இருக்கிறார்கள். அது தவறான செயல் ஆகும்.
குடும்பத்தின் வருமானம் ஈட்டும் நபர் ஒருவர் இந்த உலகில் இல்லை என்றால் அவரின் குடும்பத்துக்கு அதிக நிதி பாதுகாப்பு ஏற்பாடு செய்ய இந்த டேர்ம் லைஃப் காப்பீட்டை அதிகத் தொகைக்கு கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும். இதை விடுத்து, பணப் பலன் பாலிசிகளாக எண்டோமென்ட் மற்றும் யூலிப் பாலிசிகளை ரூ.2 லட்சம், ரூ.5 லட்சம் என்பது போல் குறைவான கவரேஜ் தொகைக்கு எடுப்பது குடும்ப உறுப்பினர்களுக்கு அதிகம் பலன் அளிக்காது.
இதேபோல், எதிர்பாராத விபத்து மூலமான மருத்துவச் செலவு, சிறுநீரக பாதிப்பு, இருதய நோய் பாதிப்பு போன்றவற்றுக்கான அதிக மருத்துவச் செலவுகளிலிருந்து தப்பிக்க குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் காப்பீட்டை சென்னை, கோவை போன்ற பெரு நகரம் என்றால் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சுமார் ரூ.10 லட்சத்துக்கு எடுத்துக் கொள்ளலாம். இதற்கு ஆண்டுக்கு சுமார் பிரீமியம் கட்ட வேண்டி வரும். சிறிய நகரங்களில் வசிப்பவர்கள் கிட்டத்தட்ட ரூ.5 லட்சத்துக்கு எடுத்துகொள்ளலாம். பணியின் தன்மை (அடிக்கடி வெளியில் சென்று வரும் பணியில் இருப்பவர்கள்), குடும்பத்தில் பெற்றோருக்கு நீரிழிவு, இருதய பாதிப்பு இருந்தால் கூடுதல் தொகைக்கு பாலிசி எடுப்பது நல்லது.
அவசரக் கால நிதி..!
திடீர் செலவுகள், வேலை இழப்பு போன்றவற்றிலிருந்து தப்பிக்க அவசரக் கால நிதி, அவசியம் இருக்க வேண்டும். மாதக் குடும்ப செலவை போல் ஆறு மடங்கு தொகையை அவசரக் கால நிதியாக சேர்த்து வைக்க வேண்டும். உதாரணத்துக்கு, மாத குடும்பச் செலவு ரூ. 25,000 என்றால் ஆறு மாதத்துக்கு தேவையான ரூ. 1.5 லட்சத்தை அவசரச் செலவுக்கு என தனியே சேர்த்து வைத்திருக்க வேண்டும்.
அவசரக் கால நிதி, ஆயுள் காப்பீடு, ஆரோக்கிய காப்பீடு மூன்றையும் எடுத்திருக்கும்பட்சத்தில் ஒருவர் எந்த நிச்சயமற்ற நிலையையும் சுலபமாக சமாளிக்க முடியும். மேலும், கடன் வாங்குவதிலிருந்து தப்பிக்க முடியும்.
கை கொடுக்கும் முதலீடு..!
அடுத்து நிதி இலக்குகளை சுலபமாக நிறைவேற்ற முதலீடுகள் கை கொடுக்கும். அந்த முதலீடுகளை முதலீட்டாளரின் ரிஸ்க் எடுக்கும் திறன், முதலீட்டுக் காலம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்வது லாபகரமாக இருக்கும்.
இந்த முதலீடுகளை தபால் அலுவலகம் மற்றும் வங்கிகளின் தொடர் சேமிப்புத் திட்டம் (ஆர்.டி) மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) ஆகிய முறைகளில் மேற்கொண்டு வருவது லாபகரமாக இருக்கும்
மூன்றாண்டுகளுக்கு உட்பட்ட நிதி இலக்குகளுக்கு, ஆர்.டி, கடன் பத்திரங்கள், கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்கள், முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் பணம் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் கடன் மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்து வரலாம் வேண்டும். இந்த முதலீடுகளில் ரிஸ்க் என்பது பெரும்பாலும் இருக்காது. இந்த முதலீடுகளின் மூலம் ஆண்டுக்கு சுமார் 6.5% முதல் 8 சதவிகிதம் வரை வருமானம் கிடைக்கும்.
இதுவே மூன்றாண்டுக்கு மேல் ஐந்தாண்டுகளுக்குள் என்றால் கடன் பத்திரங்கள் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் ஹைபிரீட் ஃபண்ட்களில் முதலீடு செய்து வரலாம். இந்த முதலீட்டில் சிறிய ரிஸ்க் இருக்கிறது. இந்த முதலீடு மூலம் ஆண்டுக்கு சராசரியாக 10% வருமானம் கிடைக்க கூடும்.
இதுவே ஐந்தாண்டுகளுக்கு மேற்பட்ட முதலீடு சென்றால், பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட்களில் முதலீடு செய்து வர வேண்டும். இந்த முதலீடுகளில் ரிஸ்க் அதிகம் இருக்கிறது, இவற்றின் மூலம் நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12% முதல் 15% வரை வருமானம் எதிர்பார்க்கலாம். அவசரக் கால நிதியை ரிஸ்க் இல்லாத வங்கிச் சேமிப்பு கணக்கு, ஆர்.ட, லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வரலாம்.
இந்த முதலீடுகளையும் எவ்வளவு சீக்கிரம் ஆரம்பிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆரம்பிக்க வேண்டும். அப்படி செய்யும்பட்சத்தில் குறைவான தொகை முதலீடு செய்து வந்தாலே போதும்.
இன்றைக்கு புதிதாக வேலைக்கு செல்பவர்களுக்கு மாதம் சராசரியாக ரூ.25,000 சம்பளம் கிடைக்கிறது. 25 வயதான நண்பர்கள் இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார்கள் என வைத்துகொள்வோம். ஒருவர் அவரின் 25 வயது முதல் அவரின் 60 வயது வரைக்கும் மாதந்தோறும் ரூ.5,000 முதலீடு செய்து வருவதாக வைத்து கொள்வோம். இன்னொருவர் அவரின் 35வது வயது முதல் 60 வயது வரைக்கும் மாதம் தோறும் ரூ. 10,000 முதலீடு செய்து வருவதாக கொள்வோம். இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைத்தால் யாருக்கு அவரின் 60வது வயதில் அதிக தொகை கிடைக்கும்?
மாதம் ரூ.5,000 வீதம் 35 ஆண்டுகளுக்கு முதலீடு செய்பவர் மொத்தம் ரூ.21 லட்சம் முதலீடு செய்திருப்பார். இது அவரின் 60வது வயதில் ரூ.3.25 கோடியாக அதிகரித்திருக்கும். மாதம் ரூ.10,000 வீதம் 25 ஆண்டுகளுக்கு முதலீடு செய்பவர் மொத்தம் ரூ.30 லட்சம் முதலீடு செய்திருப்பார். இது அவரின் 60வது வயதில் ரூ.1.90 கோடியாக அதிகரித்திருக்கும். எனவே, முதலீட்டை சீக்கிரமாக ஆரம்பித்தால் கோடிகள் சுலபமாக கைவசமாகும்.
மேலே சொன்னபடி ஒருவர் செயல்பட்டால், அவருக்கு நிச்சயம் பணச் சிக்கல் வராது எனலாம்.